×

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து பெல் நிறுவன தொழிற்சங்கம் வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்கான டெண்டர் ஒதுக்கீடை எதிர்த்து பெல் நிறுவன தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்த வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2019ல் டெண்டர் கோரியது. அதில் வெற்றிபெற்ற லான்கோ நிறுவனம் பணிகளை முடிக்காமல் கைவிட்ட நிலையில், அந்த டெண்டர் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டிய தொகையை 16 மாதங்களாக செலுத்தாததால் டெண்டர் உத்தரவை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ல் டான்ஜெட்கோ உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மீண்டும் டெண்டர் கோரக்கூடாது எனவும் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கே வழங்கி டான்ஜெட்கோ 2022 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், இந்த டெண்டரில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்.

விதிகளின்படி அந்த டெண்டரை இரண்டாம் நிலையில் உள்ள பெல் நிறுவனத்திற்கு தான் கொடுத்திருக்க வேண்டும். டெண்டரை பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கே ஒதுக்கியது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுவாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர்கள் தரப்பில் டெண்டர் எடுத்த பணிகளை அமல்படுத்துவதில் 3 ஆண்டு காலதாமதம் ஆகியுள்ளது. அடிப்படை பணிகளை கூட பி.ஜி.ஆர். எனர்ஜி தொடங்கவில்லை. எனவே, இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததுதான் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தரப்பு விளக்கம் அளிப்பதற்காக விசாரணையை பிப்.22க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து பெல் நிறுவன தொழிற்சங்கம் வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bell Company Union ,Ennore ,Court ,CHENNAI ,Bell unions ,
× RELATED ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!